இளைய தளபதியின் சாதனை வீடியோ

இளைய தளபதியின் சாதனை வீடியோ 
vijay sathanai video
தமிழ் சினிமாவின் 80 வருட வரலாற்றில் முக்கிய ஹீரோக்களின் பட்டியலை தயார் செய்தால் கண்டிப்பாக அதில் ‘இளையதளபதி’ விஜய்க்கும் இடமுண்டு.

அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் வேரூன்றியிருக்கிறது விஜய்யின் அபார வளர்ச்சி. ‘இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன்’ என்ற விசிட்டிங் கார்டோடு திரையுலகிற்குள் நுழைந்தாலும், படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டதில் விஜய்யின் கடுமையான உழைப்பு நிச்சயம் இருக்கிறது.

எத்தனையோ பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவிற்குள் நுழைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அத்தனை பேரும் ஜெயித்துவிடுவதில்லை.

1974ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி பிறந்த ஜோசப் விஜய் சந்திரசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘வெற்றி’, ‘நான் சிவப்பு மனிதன்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’ ஆகிய மூன்று படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

1984ல் ‘வெற்றி’ படம் ரிலீஸ் ஆனது. அதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது ஒட்டுமொத்தமாக விஜய் சினிமாவுக்கு நடிக்கவந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. தன் முதல் படத்தில் ‘விஜய்’ என்ற கேரக்டரில் நடித்தவர், அதையே சினிமாவிற்கும் பயன்படுத்திக் கொண்டார்.

1992ல் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் விஜய் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகும் தொடர்ந்து அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய படங்களிலேயே நடித்தார்.

விக்ரமன் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த ‘பூவே உனக்காக’ படத்தின் மாபெரும் வெற்றி, விஜய் மேல் அதற்கு முன்பிருந்த மைனஸ்களையெல்லாம் ‘ப்ளஸ்’ஸாக மாற்றியது.

அதன் பிறகு ‘லவ் டுடே’, ‘காதலுக்கு மரியாதை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என 90களின் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்தார் ‘இளையதளபதி’.

முன்னணி நடிகர்களின் வசூலுக்கு இணையாக விஜய் படங்களும் வசூலைக் குவித்து 100 நாட்கள், 25 வாரங்கள், 200 நாட்கள் என விஜய் படங்களில் சில பெரிய அளவில் ‘கல்லா’ கட்டின.

குறிப்பாக எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘குஷி’, ‘ப்ரியமானவளே’, ‘ப்ரண்ட்ஸ்’ என வரிசையாக ரிலீஸாகிய விஜய் நடித்த 3 படங்களுமே ‘பாக்ஸ் ஆபிஸி’ல் சாதனை படைத்தது.

இந்த ‘ஹாட்ரிக்’ வெற்றிக்குப் பிறகு விஜய்யின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. ஆனால் அதன் பிறகு விஜய்க்கு வெளியான சில படங்கள் சரிவர கைகொடுக்கவில்லை.

விஜய்யின் மார்க்கெட்டில் லேசாக தொய்வு ஏற்பட்டிருந்தபோது, 2003ஆம் ஆண்டு ரமணா இயக்கத்தில் வெளிவந்த ‘திருமலை’ படத்தின் வெற்றி விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அதோடு அதுவரை ‘ரொமான்ஸ் ஹீரோ’ என்றிருந்த இமேஜ் மாறி ‘ஆக்ஷன் ஹீரோ’வாக ஆனார் விஜய். அதன் பிறகு வெளிவந்த படங்களான கில்லி, திருப்பாச்சி, போக்கிரி என ஆக்ஷன் ஹிட்களாக கொடுத்தார்.

போக்கிரி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் விஜய்யின் வளர்ச்சி மிகப்பெரிய உயரத்திற்குச் சென்றது. ரஜினி, கமலுக்கு அடுத்த முன்னணி நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடம்பிடித்தார் விஜய்.

‘போக்கிரி’க்குப் பிறகு மீண்டும் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டாலும், ‘காவலன்’ மறுபடியும் விஜய்யை ‘பாக்ஸ் ஆபிஸ் கிங்’ என்பதை நிரூபித்தது. ஷங்கரின் ‘நண்பன்’ விஜய்க்குள்ளிலிருந்த ஒரு மென்மையான நடிகனை அடையாளம் காட்டியது.

2012ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘துப்பாக்கி’ படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளைப் படைத்தது. ‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு மிகப்பெரிய வசூல் செய்த படமாக ‘துப்பாக்கி’யைத்தான் சொல்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.

இப்போது இதே கூட்டணி ‘கத்தி’ மூலம் மீண்டும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. இப்படம் குறித்த விமர்சனங்கள் இருவேறாக இருந்தாலும் படம் பெரிய அளவில் வசூல் செய்திருப்பதாகவே படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரு புறம் படங்களில் கவனம், இன்னொரு புறம் ரசிகர் மன்றங்களை முறையாக வளர்ப்பதில் கவனம் என முதல் இடத்தை நோக்கிய பயணத்தில் தீவிரமாக இருக்கிறார் விஜய். அதோடு தனது ரசிகர் மன்றங்கள் மூலம் ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறார்.

அரசியலில் நுழைவதற்கான முன்னேற்பாடாக இதை சிலர் சித்தரித்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான் செய்து வரும் சமூகப் பணிகளை இப்போது வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

சாதாரண நடிகனாக அறிமுகமான விஜய், இன்று அனைவராலும் ‘இளையதளபதி’யாக கொண்டாடப்படுகிறார். விஜய்யின் ரசிகர்கள் அவரை அடுத்த ‘சூப்பர்ஸ்டார்’ என அழைத்தபோதும், ‘‘எப்போதும் நான் உங்கள் இளையதளபதியாகவே இருக்க விரும்புகிறேன்!’’ என அதை அன்போடு மறுத்திருக்கிறார் லட்சக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் இந்த ‘தலைவா’.

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.விஜய்க்கு இது 58வது படம். திரையுலகில் இன்னும் ‘இளையதளபதி’யின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்..!



Previous
Next Post »